சென்னையில் எழும்பூர் அருங்காட்சியகத்தில் சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கை முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார். இதில் கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்ட நிலையில், கருப்பு நிற துப்பட்டா அணிந்து வந்த மாணவிகளிடம் கருப்பு நிற உடை அணியக்கூடாது என்று கூறினர். அதோடு அந்த துப்பட்டாக்களை பாதுகாப்பு பிரிவு காவல் துறையினர் வாங்கி வைத்துக் கொண்டு, அவர்களை உள்ளே அனுமதித்தனர். இதையடுத்து நிகழ்ச்சி முடிந்த பின்னர், மாணவிகளிடம் துப்பட்டாக்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

மேலும் கருப்பு நிற பைகள், உடை போன்றவையும் வாங்கி வைக்கப்பட்டு நிகழ்ச்சி முடிந்த பின்னர் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார். அதில் அவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில், கருப்பு துப்பட்டா அணிந்திருந்த மாணவிகள் அரங்கத்திற்குள் நுழைவதற்கு முன்பாக அவற்றை அகற்றி விட்டு வருமாறு கூறப்பட்டுள்ளது. அவர்களுக்குள் பயம் வந்துவிட்டது, என்ன செய்வது என்று தெரியாமல் நம்பிக்கையற்றவர்களாக மாறிவிட்டனர். இது என்ன வகையான எதேச்சதிகாரம் என்று தெரிவித்துள்ளார்.