
கேரளாவில் உள்ள கோட்டயம் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த நிலையில் இந்த மருத்துவ கல்லூரியில் பெண் செவிலியர்கள் உடைமாற்றும் அறையில் கேமரா ஒன்று மறைத்து வைக்கப்பட்டதாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரில், பெண் பணியாளர் ஒருவர் உடைமாற்றும் அறைக்குள் செயல்பாட்டில் இருந்த மொபைல் போனை கண்டுபிடித்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகளிடம் உடனடியாக தகவல் கொடுத்துள்ளார். அதன்படி காந்தி நகர் காவல் துறையினர் மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் உடைமாற்றும் அறைக்குள் வைக்கப்பட்டிருந்த மொபைல் போன் கைப்பற்றப்பட்டது. இந்த மொபைல் போன் வீடியோ பதிவு செய்யும் நோக்குடன் வைக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதனை அடுத்து இந்த மொபைல் போனின் உரிமையாளர் அன்சன் ஜோசப் (24). இவர் பிஎஸ்சி நர்சிங் படிப்பை முடித்துவிட்டு ஒரு மாதத்திற்கு முன்பு மருத்துவமனையில் பயிற்சிக்கு சேர்ந்துள்ளது தெரிய வந்தது. இதனை அடுத்து காவல்துறையினர் அன்சன் ஜோசப்பை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.