கொரோனா ஊரடங்கு சமயத்தில் ஆன்லைன் தளங்களில் நேரடியாக ரிலீசான படங்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது பா.ரஞ்சித் டைரக்டில் ஆர்யா நடிப்பில் உருவான “சார்பட்டா” படம். பசுபதி, காளி வெங்கட், துஷாரா விஜயன், கலையரசன், ஜான், கொக்கேன் உட்பட பலரும் நடித்திருந்த இந்த படம் கடந்த 2021 ஆம் வருடம் ஜூன் 22 ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் ரிலீஸ் ஆனது. குத்துச்சண்டையை மையமாகக் கொண்டு சார்பட்டா படம் உருவாக்கப்பட்டு இருந்தது. இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

இந்த படம் ரிலீஸ் ஆகி 2 வருடங்களை நிறைவு செய்ய இருக்கும் நிலையில், எதிர்பாராத வகையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா 2ஆம் பாகம் வெளியாகப்போகிறது என நடிகர் ஆர்யா போஸ்டரை பகிர்ந்து “Match பார்க்க ready-யா?, ரோஷமான ஆங்கில குத்துச்சண்டை Round Sarpatta-2 விரைவில் என டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் பா.ரஞ்சித்தின் ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்து வந்த சந்தோஷ் நாராயணன் தான் சார்பட்டா 2ம் பாகத்திற்கும் இசையமைக்க போகிறாரா..? எனும் கேள்வி எழுந்திருக்கிறது. ஏனென்றால் சார்பட்டா பரம்பரை படத்தில் அடிநாதமாக திரைக்கதையும், இசையமைப்பும் தான் இருக்கும். தற்போது சார்பட்டா-2 அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பதால் இதில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இருப்பாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.