18 ஆண்டுகளுக்கு முன் ஜெய்ப்பூரில் உள்ள ஸ்டேடியத்தில் தோனி ஆக்ரோஷமான இன்னிங்ஸ் ஆடிய நிலையில், மீண்டும் அந்த பழைய ஆட்டத்தை அவரிடம் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்..

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கேப்டனுமான மகேந்திர சிங் தோனி, அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார். இந்த ஆண்டு நடந்து வரும் இந்தியன் பிரீமியர் லீக்கின் 16வது சீசன் தனது கடைசி தொடராக இருக்கும் என்றும் அவர் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தோனியின் தலைமையில் 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. இந்த ஐபிஎல் சீசனிலும் , அவரது அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

சென்னை அணி விளையாடிய 7 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று 7:30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸைப் பற்றி பேசுகையில், அவர்கள் புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளனர். இம்முறை சென்னை அணி 5-வது பட்டத்துக்கு மிகப்பெரிய போட்டியாக இருக்கும் என தெரிகிறது. தோனி இந்த ஆண்டு இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 196.04 ஸ்ட்ரைக் ரேட்டில் 61 ரன்கள் எடுத்துள்ளார்.

ஏன் இந்த மைதானம் தோனிக்கு ஸ்பெஷல் :

அக்டோபர் 2005 இல், இந்தியா மற்றும் இலங்கை இடையே 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற்றது. இந்தத் தொடரின் 3வது போட்டி 31 அக்டோபர் 2005 அன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த நீண்ட முடி கொண்ட எம்.எல். தோனி,  145 பந்துகளில் 183 ரன்கள் குவித்தார். அவர் 15 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் விளாசினார். இப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் குவித்தது. பின் ஆடிய இந்திய அணி தோனியின் அதிரடியால் 46.1 ஓவரில் 4 விக்கெட் இழந்து 303 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த இன்னிங்ஸுக்குப் பிறகு, தோனி இந்திய கிரிக்கெட் அணியில் தனது இடத்தை உறுதிப்படுத்தினார்.

கிரிக்கெட் உலகில், தோனியின் அந்த ஆக்ரோஷமான இன்னிங்ஸால் இந்த மைதானம் நினைவில் நிற்கிறது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு தோனி மீண்டும் அதே மைதானத்தில் காணப்படுகிறார், தோனியின் பேட்டிங்கில் மீண்டும் அத்தகைய சாதனையை காண முடியுமா என்பது சுவாரஸ்யமாக இருக்கும். இந்த ஸ்டேடியம் ராஜஸ்தான் ராயல்ஸின் கோட்டையாக கருதப்படுவதால் கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.