சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய நிலையில் பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி சதம் அடித்து அசத்திய நிலையில் புதிய சாதனையும் படைத்தார். அதாவது ஒரு நாள் தொடர்களில் 14000 ரன்களை கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். அதோடு குறைந்த இன்னிங்ஸில் 14 ஆயிரம் ரன்கள் கடந்த வீரர் என்ற பெருமையை பெற்று சச்சினின் சாதனையையும் முறியடித்துள்ளார். அதோடு ஒரு நாள் தொடர்களில் தன்னுடைய 51 வது சதத்தையும் பூர்த்தி செய்துள்ள நிலையில் முகமது அசாருதீன் ஒரு நாள் தொடர்களில் 156 கேட்ச் பிடித்து முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது ஒரு நாள் தொடரில் இந்திய அணிக்காக அதிக கேட்சுகளை பிடித்த வீரர் என்ற பெருமையையும் கோலி பெற்றுள்ளார்.

இந்நிலையில் விராட் கோலி சதம் அடித்த போது ரோகித் சர்மா கொடுத்த ரியாக்ஷன் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது கோலி சதத்தை நெருங்கிய போது டிரெஸ்ஸிங் ரூமில் இருந்த ரோஹித் சர்மா சைகை காண்பித்து அதை சிக்ஸர் அடித்து முடிக்கலாம் என்கிற விதத்தில் கூறினார். அந்த சதத்தை விராட் அடித்து விட்டு பெவிலியன் திரும்பிய போது ரோகித் சர்மா உடனே வந்து அவரைக் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார்.  இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் இந்த போட்டியில் இந்திய அணியின் பல்வேறு வீரர்கள் முக்கிய சாதனைகளை புரிந்தனர். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு தொடக்க வீரராக 9,000 ரன்களை எட்டிய மிக வேகமான வீரராக புதிய சாதனை படைத்தார். முன்னதாக சச்சின் தெண்டுல்கர் 197 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டிய நிலையில், ரோஹித் அதை வெறும் 181 இன்னிங்ஸ்களில் எட்டினார். அதேநேரத்தில், குல்தீப் யாதவ் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் 300 விக்கெட்டுகளை எட்டி இந்திய அணியின் ஐந்தாவது சிறந்த ஸ்பின்னராக உள்ளார். ஹார்திக் பாண்ட்யா தனது 200வது சர்வதேச விக்கெட்டை வீழ்த்தி, பாகிஸ்தான் அணிக்கு எதிராக முக்கியமான பந்து வீச்சு மைல்கல்லை அடைந்தார்.