கடந்த 2020 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தால் பெருந்தொற்று என்று அறிவிக்கப்பட்ட கொரோனா உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் தமிழக அரசு மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசியை வழங்கியதன் மூலம் அந்த தொற்றில் இருந்து மீண்டு தற்போது சமூக பரவலாக வீரியம் குறைந்து வருகிறது.

இந்த ஆண்டு கொரோனா பரவல் மிக குறைவாகவே காணப்படுகிறது. அதிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த தீவிர அறிகுறியும் காணப்படவில்லை. இந்தியாவில் இந்த ஆண்டில் கொரோனா தொற்றால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக முகக்கவசம் அணிவது பாதிக்கப்பட்ட நபரை அழைத்துச் செல்வது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.

இதற்கு தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து பொது சுகாதாரத் துறை கூறியதாவது, கொரோனா பரவல் காரணமாக முகக்கவசம் அணிவது, பாதிக்கப்பட்ட நபரை அழைத்துச் செல்வது என எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் உண்மை அல்ல. மக்கள் யாரும் அதனை நம்ப வேண்டாம். கொரோனா தொற்றுக்கு எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டுள்ளது எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.