
நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். இக்கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் 27ம் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 2026ம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி தயாராகி வருகிறது. இதற்காக நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவது தொடர்பான வேலைகள் தவெக-வில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதற்கட்டமாக கடந்த 24ம் தேதி, 19 மாவட்டங்களுக்கு செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டது. இவ்வாறு நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு தனது உருவம் பொறித்த வெள்ளி நாணயத்தை விஜய் பரிசாக வழங்கினார்.
இன்னிலையில் 2-ம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. முன்னதாக தவெக கட்சி அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகளோடு தலைவர் விஜய் இன்று ஆலோசனை நடத்தினார். இதில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து வந்த நூற்றுக்கணக்கான நிர்வாகிகளும் பங்கேற்றனர். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தர்மபுரி, சேலம், மதுரை, மயிலாடுதுறை, ஈரோடு, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கோயம்புத்தூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் சேர்ந்த நிர்வாகிகள் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். இதையடுத்து தவெக தலைவர் விஜய் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகியையும் தனித்தனியாக சந்தித்து நியமன ஆணைகளை வழங்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது அவர் கூறியதாவது, உங்களை நம்பி மக்களுக்காக இந்த கட்சி தொடங்கப்பட்டுள்ளது. இனி நீங்கள் தான் இதன் வளர்ச்சியை பார்த்துக் கொள்ள வேண்டும். இத்தனை ஆண்டுகளாக விஜய் மக்கள் இயக்கமாக இருந்த போதும் எனக்கு துணையாக நின்று என்னுடன் உழைத்திருக்கிறீர்கள். உங்களது நீண்ட கால கோரிக்கையை ஏற்று நாம் தற்போது கட்சியை தொடங்கி சிறப்பாக பயணத்தை தொடர்ந்து வருகிறோம். அனைவரும் சேர்ந்து பயணிப்போம் நிச்சயமாக 2026 ஆம் ஆண்டு வெற்றி பெறுவோம். முன்பு நாம் மக்களுக்கு சேவை செய்தோம், ஆனால் அதைவிட இனிவரும் காலங்களில் கடுமையாக உழைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.