திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சீதற்பநல்லூர் அருகே வேளாண்குளம் கிராமத்தில் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் முருகன் (26). இவர் தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் இரு தரப்பினருக்கிடையே பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் அரிவாளுடன் இருக்கக்கூடிய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

இந்தப் புகைப்படம் வைரலானதை அடுத்து சீதற்பநல்லூர் எஸ்.ஐ செய்யது நிஷார் அஹமது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் சமூக வலைதளங்களில் இருதரப்பினர் இடையே பிரச்சனையை ஏற்படுத்தும் விதமாக ஆயுதங்களுடன் கூடிய புகைப்படங்களை வெளியிட்ட முருகனை மார்ச் 26 ஆம் தேதி கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் மற்றும் குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு இடையே வன்முறையை ஏற்படுத்தும் விதமாக பதிவுகளை வெளியிடுவோர் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும்,  இன்ஸ்டாகிராமில் ஆயுதங்களுடன் படங்கள் அல்லது வீடியோக்களை பதிவிடுவது தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.