
கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து வந்த தாய் ஏர்வேஸ் விமானத்தில் அரிய வகை விலங்குகள் கடத்திக் கொண்டுவரப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே பல கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் உள்ளிட்டவை கேரளா விமான நிலையங்களுக்கு கடத்திக் கொண்டு வருவது குறித்து பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தாய் ஏர்வேஸ் விமானத்திலிருந்து இறங்கிய பத்தினம் திட்டா பகுதியைச் சேர்ந்த ஜாப்சன் ஜாய் (28) மற்றும் ஆர்யமோல்(28) என்ற தம்பதியினர் கொண்டு வந்த உடைமைகளை பாதுகாப்புத்துறையினர் சோதனை செய்தனர்.
அந்த சோதனையில் அவர்கள் பையில் உள்ள ஒரு சிறிய பெட்டியில் அரிய வகை விலங்குகளான “மர்மோசெட்”என்ற 3 குரங்கு குட்டிகள், 2 வெள்ளை உதடு கொண்ட புலிக்குட்டிகள், ஒரு “ஹியான்சித் மக்காவ்” என்ற அரிய இன கிளி இருந்தது.
இவற்றின் மதிப்புகள் லட்சக்கணக்கில் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இவை இந்தியாவிற்குள் தடை செய்யப்பட்ட விலங்கினங்கள் ஆகும். அவற்றை கடத்தி வந்த கணவன்- மனைவி இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில், சிலர் எங்களிடம் இந்த பெட்டிகளை கொடுத்து கொச்சி விமான நிலையத்தில் சிலர் வந்து வாங்கிக் கொள்வார்கள் எனக்கூறி அனுப்பி வைத்தனர் என தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து தம்பதியினர் இருவரையும் கைது செய்து காவல்துறையினர் அவர்களிடமிருந்த விலங்குகளை பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்தக் கடத்தலுக்கு வேறு யாரேனும் தொடர்பு உள்ளனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.