தமிழகத்தில் அரிசிக்கு பதிலாக பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ராகி வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ள நிலையில் சோதனை அடிப்படையில் நீலகிரி மற்றும் தர்மபுரி போன்ற மாவட்டங்களில் முதல் கட்டமாக அரிசிக்கு பதில் ராகி வழங்கும் திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் வேலூர் போன்ற மாவட்டங்களில் ராகி அதிக அளவில் விளையும். எனவே சோதனை அடிப்படையில் ரேஷன் அட்டைதாரர்களின் விருப்பத்தின் பேரில் 2 கிலோ ராகி வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தர்மபுரி அருகே உள்ள மதிக்கோண்பாளையம் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் ராகி நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இந்த விழாவில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு ராகி கொள்முதல் நிலையத்தை தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு விதைகளை வழங்கினார்.

அதன் பிறகு அமைச்சர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் பேசியதாவது, தர்மபுரி மாவட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசிக்கு பதில் ஒவ்வொரு மாதமும் 2 கிலோ ராகி வழங்குவதற்கு வழங்குவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன் பிறகு சிறு குறு விவசாயிகள் நேரடியாக ராகி கொள்முதல் நிலையத்திற்கு வந்து பட்டா மற்றும் அடங்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன் வந்து ஆன்லைன் மூலம் தங்களுடைய ஆவணங்களை பதிவேற்றம் செய்து ராகி விற்பனை செய்து பயன்பெறலாம். ராகி விற்பனை செய்ததற்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். மேலும் ராகி விற்பனை தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சந்தேகங்களுக்கு விவசாயிகள் வேளாண்மை துறை அலுவலரை தொடர்பு கொண்டு பேசலாம் என்று கூறினார்.