
மத்திய அரசு அனைத்து மக்களுக்கும் அதிவேக இணைய சேவையை வளர்க்கும் நோக்கத்தில் பாரத் நெட் திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களுக்கும் இணைய சேவை வழங்க தொடங்கியது. தமிழகத்தில் உள்ள 12525 கிராமத்திற்கு இணையதள சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது இறுதி கட்டத்தில் எட்டி உள்ளது. இதற்காக தமிழகத்தில் சுமார் 55 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு கேபிள் பதியப்பட்டுள்ளது.
மேலும் 11,800 கிராமங்களில் பணிகள் முழுவதும் முடிவடைந்து விட்டது. ஆனால் வனப்பகுதிகள் உள்ளிட்ட சில பகுதியில் அனுமதி பெற்று கேபிள் பதிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் அங்கு மட்டும் பணிகள் முழுமை அடையவில்லை. இருப்பினும் அடுத்த மாதத்திற்குள் அந்த பணிகளையும் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 4000 கிராமங்களில் இணையதள சேவை வழங்குவதற்கான நபர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்புகள் https://tanfinet. tn.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இன்னும் சில தினங்களில் மேலும் 4000 கிராமங்களுக்கும், அதை தொடர்ந்து மீதமுள்ள கிராமங்களுக்கும் அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன. தற்போதைய நிலையில் ஏஜென்சிகள் நியமனம் முடிந்து விட்டால் அரசின் அனுமதி பெற்று உடனடியாக பொதுமக்களுக்கு இனிய சேவை கொடுக்கப்படும். அடுத்த மாதத்தில் இணைப்புகள் வழங்கும் பணி தொடங்கி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இணைய சேவை வீடுகளுக்கு குறைந்தபட்சமாக ரூபாய் 199 கட்டணத்தில் 20 எம்பிபிஎஸ் வேகத்தில் அளவில்லா இணையதள சேவை வழங்கப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து ரூபாய் 399 மற்றும் ரூபாய் 499 திட்டமும் வழங்கப்பட உள்ளது. அதற்கேற்ற வகையில் வேகம் இருக்கும்.