
பாஜக கட்சியின் மூத்த தலைவரும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான சத்திய பால் மாலிக் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் இறந்ததற்கு காரணம் மத்திய அரசின் அலட்சியம் தான் என வெளிப்படையாக கூறினார். அதன் பிறகு இது குறித்து பிரதமர் மோடி வெளியே எதுவும் பேச வேண்டாம் என தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா தற்போது சத்திய பால் மாலிக் பேசியதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அதாவது ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு மந்திரி அமித்ஷா கொடுத்த பேட்டியின் போது சத்யபால் மாலிக் பேசியது தொடர்பாக தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு அமித்ஷா கூறியதாவது, பாஜக இதுவரை எந்த விஷயத்தையும் மறைமுகமாக செய்தது கிடையாது. குற்றம் நடந்திருந்தால் அதை பதவியில் இருக்கும் போதே சொல்லியிருக்க வேண்டியதுதானே. அப்போது மௌனமாக இருந்துவிட்டு, இப்போது இப்படி பேசுவதற்கான காரணம் என்ன.? இதனால் அவரின் நம்பகத்தன்மையை சோதிக்க வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார். மேலும் நேற்று சத்திய பால் மாலிக் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் காப்பீடு நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.