ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எதிரொலியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடி  கொடுத்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நள்ளிரவில் 9 பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் 26 பேர் உயிரிழந்த நிலையில் 60 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவரான சந்தோஷ் ஜக்தலேவின் மனைவி “என் கணவரின் மரணத்திற்கு நீதி கிடைத்துவிட்டது. நாங்கள் மகிழ்ச்சியில் அழுது கொண்டிருக்கிறோம். இந்த தாக்குதலுக்கு ஆப்ரேஷன் சிந்தூர் என்று பெயரிட்டது எங்கள் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது” என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த சுபம் திவேதியின் மனைவி “என் கணவரின் மரணத்திற்கு பிரதமர் மோடி பழிவாங்கி விட்டார். என் குடும்பத்தினர் அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தனர். அதன்படி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதுவே என் கணவருக்கு செலுத்தப்படும் உண்மையான அஞ்சலி” என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து சுபம் திவேதியின் தந்தை, சஞ்சய் திவேதி பேசினார். அவர் பேசிய போது, “நாட்டு மக்களின் வலியை கேட்டதற்காக பிரதமர் மோடிக்கும், இந்திய ராணுவத்திற்கும் நன்றி செலுத்துகிறேன்” என்று கூறினார். அதோடு “ஆபரேஷன் சிந்தூர் இந்திய மக்களுக்கு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. வளர்ந்து வரும் பயங்கரவாதிகளை அளித்ததற்காக மிக்க நன்றி, இந்த செய்தியை கேட்டதிலிருந்து என் குடும்பம் மகிழ்ச்சியாக உள்ளது” என்றும் கூறினார்.