
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொடிவிளாகம் பகுதியில் ஆட்டோ ஓட்டுனரான வினு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டயானா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் இரண்டாவது மகன் சாண்டினோ(2 1/2). இந்நிலையில் டயானா சமையல் செய்து கொண்டிருந்தபோது சாண்டினோ பக்கத்து வீட்டிற்கு விளையாட சென்றுள்ளான். இதனையடுத்து சமையல் வேலை முடித்துவிட்டு டயானா தனது குழந்தையை தேடி பக்கத்து வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது வீட்டு வளாகத்தில் இருக்கும் மீன் தொட்டியில் சாண்டினோ அசைவற்ற நிலையில் கிடந்ததை பார்த்து டயானா அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தனது குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் சாண்டினோ ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மீன் தொட்டியை எட்டி பார்த்தபோது தவறி விழுந்து மேற்பரப்பில் விரிக்கப்பட்ட வலையில் சிக்கி குழந்தை இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.