சேலம் மாவட்டத்தில் உள்ள வடக்கு பூலாம்பட்டி பகுதியில் விவசாயியான வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் உறவினரான விஜயகுமார் என்பவர் கடந்த 2012-ஆம் ஆண்டு என்னிடம் ஈமு கோழி பண்ணை வைத்தால் நல்ல லாபம் கிடைக்கும் என கூறினார்.

இதனையடுத்து நான் கையெழுத்திட்ட ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை, மின்சார கட்டண நகல், புகைப்படம் ஆகியவற்றை வாங்கிக் கொண்டார். சிறிது நாட்கள் கழித்து கோழிப்பண்ணை வைப்பது தற்போது பிரச்சினையாக இருக்கிறது என கூறினார். இதனால் நான் கொடுத்த ஆவணங்களை திரும்பி கேட்டேன். அவர் ஆவணங்களை பிறகு தருகிறேன் என தெரிவித்தார்.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து தனியார் நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் எங்கள் வீட்டிற்கு வந்து நீங்கள் வாங்கிய மானிய கடனுக்கு ஏன் தவணைத் தொகை கட்டவில்லை என கேட்டனர். அப்போதுதான் விஜயகுமார் எனது ஆவணங்களை வைத்து போலி ஆவணம் தயாரித்து நிதி நிறுவனத்தில் மானியம் பெற்று பழைய லாரி ஒன்றை வாங்கியது தெரியவந்தது.

இதற்கு ராஜா, நிதி நிறுவனத்தின் ஊழியர்களான ஜெயக்குமார், நாராயணன், சுப்பிரமணியன் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். மொத்தம் அவர்கள் 14 லட்சத்து 76 ஆயிரத்து 38 ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான விஜயகுமார், ராஜா, நாராயணன், ஜெயக்குமார், சுப்ரமணியன் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.