திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி பகுதியில் 12-ஆம் வகுப்பு மாணவர் சின்னதுரை, அவரது தங்கை சந்திரா செல்வி ஆகியோரை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியது. இதனால் படுகாயமடைந்த இருவரும் பாளையங்கோட்டை அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த மாணவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்தார்.

இதற்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் ஸ்ரீதேவி தலைமையில் டாக்டர்கள் ஸ்ரீதர், மகேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று திருநெல்வேலிக்கு வந்து மாணவர் சின்னதுரையை பரிசோதித்தனர். அப்போது அவரது இடது கையில் மூன்று இடங்களிலும், வலது கையில் ஒரு இடத்திலும் ஆழமான வெட்டுக்காயம் இருந்தது.

அந்த பகுதிகளில் ஸ்டான்லி மருத்துவ குழுவினர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தொடங்கி வெற்றிகரமாக முடித்தனர். இதுகுறித்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ரேவதி பாலன், ஸ்டான்லி மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் குழுவினர்கள் கூறியதாவது, சின்னதுரைக்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை ஏற்கனவே செய்யப்பட்டது. சுமார் 3 மணி நேரம் உரிய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக முடிந்தது.

தசைநார்கள், ரத்த குழாய்கள், நரம்புகள் காயப்பட்டிருந்ததால் அவற்றை இணைக்கும் முக்கிய பணிகள் நடைபெற்றது. மாணவரின் உடம்பில் ஏழு முதல் எட்டு வெட்டு காயங்கள் இருக்கிறது. மருத்துவ குழுவினர் மாணவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சுமார் நான்கு வாரத்திற்கு மாணவர் கைகளில் கட்டுப்போட்டவாறு தான் இருப்பார். அதன் பிறகு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் அடுத்த கட்ட நிலை தெரிய வரும். தற்போது இருவரையும் நோய் தொற்று வராத பாதுகாப்பான அறையில் வைத்திருப்பதால் பார்வையாளர்கள் வருவதை குறைத்து கொண்டு சிகிச்சைக்கு ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்தனர்.