மத்திய பிரதேசத்தில் புர்கான்பூர் மாவட்டம் உள்ளது. இப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் மக்கள் திடீரென புதையலை தேடி கிளம்பிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி வெளியான “சாவா” என்ற திரைப்படம் ரசிகர்களுக்கு இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் மராட்டிய அரசர் சத்ரபதி சிவாஜி மகராஜ் -சாயிபாய் தம்பதியரின் மூத்த மகன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை கதையை கொண்டு எடுக்கப்பட்டதாகும். இந்த திரைப்படத்தில் புதைக்கப்பட்ட தங்க நாணயங்களை பற்றி பேசும் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது.

இந்த காட்சியை பார்த்த கிராமவாசிகள் அங்கே உண்மையில் புதையல் புதைந்து இருக்கலாம் என நினைத்து புதையலை தேட ஆரம்பித்தனர். அதன்படி இரவு 7 மணி முதல் புதையலை தேட ஆரம்பித்தவர்கள் 3 மணி வரை தேடினர். இதில் சிலர் தங்க நாணயங்களை கண்டறிவதற்காக மெட்டல் டிடெக்டர் போன்ற கருவிகளை பயன்படுத்தினர். இந்த சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் உடனடியாக அங்கு சென்று “அரசாங்கத்தின் அனுமதியின்று இதுபோன்று செய்தது தவறு” என்று எச்சரித்தனர். அப்போது நிலத்தின் உரிமையாளர்கள் தங்களுடைய நிலம் சேதமடைந்திருப்பதாக அதிகாரிகளிடம் கூறினர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.