
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நிகழ்ச்சி நடைபெற்றது. மாநாட்டிற்கு வந்த விஜய் லட்சக்கணக்கான தொண்டர்களை பார்த்ததும் நெகிழ்ச்சி அடைந்து கண்கலங்கினார். அதன் பின் சுதந்திர போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியதோடு, 100 அடி கொடிக்கம்பத்தை ரிமோட் மூலம் ஏற்றினார். அதன் பின் தனது தாய் மற்றும் தந்தையிடம் ஆசி பெற்று அவர் கூறியதாவது, யார் கீழே, யார் மேலே என்று நாம் பார்க்கப் போவதில்லை. எல்லாரும் சமம் தான், எல்லாரும் ஒன்றுதான். இந்த மேடையில் கோபமாக கொந்தளித்தால் பேசப்படுவோம் என்று இருந்தது.
ஆனால் நமக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது, சொல்ல வந்த விஷயத்தை நேரடியாக சொல்லிவிட வேண்டும். அரசியல் தொழில்நுட்பம் தான் மாற வேண்டுமா? ஏன் அரசியல் மாறக்கூடாதா? மாறனும். இல்லையென்றால், இந்த புதிய உலகம், புதிய அலை மாற்றிவிடும். திராவிடமும், தமிழ் தேசமும் எனது இரு கண்கள். என் சகோதரியை நான் இழந்த போது எனக்கு ஏற்பட்ட வலியும், வேதனையும், சகோதரி அனிதா உயிரிழந்த போதும் நான் பெற்றேன். எல்லாருக்கும் எல்லாமே கிடைக்க வேண்டும். நான் கூத்தாடி தான், அரசியலுக்கு எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் வந்த போதும் அப்படித்தானே சொன்னார்கள்.
மக்களே கவலைப்படாதீர்கள், நான் வந்து விட்டேன். உங்கள் விஜய் வந்து விட்டேன் என்றார். பச்சை தமிழர் காமராஜர் வழியில் தமிழக வெற்றி கழகம் செயல்படும். மக்கள் விரோத ஆட்சியை நடத்திவிட்டு, திராவிட மாடல் என்று ஏமாற்றுகிறார்கள். அவர்கள் பாசிச ஆட்சி என்றால்? நீங்கள் பாயாச கட்சியா? பெரியார், அறிஞர் அண்ணா பெயரைச் சொல்லி குடும்ப ஆட்சியை நடத்தி வருகின்றனர். அவர்களும் நம்முடைய கொள்கை எதிரி தான். ஒரு மனிதனுக்கு வீடு, உணவு, வேலை ஆகிய 3 அடிப்படை தேவை.
இவை மூன்றையும் கொடுக்க முடியாத அரசு இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன. 2026ல் தனி பெரும்பான்மையுடன் மக்கள் வெற்றி பெற வைப்பார்கள் என்று கூறி விஜய் நம்முடன் வர நினைப்பவர்களுடனும் சேர்ந்து பணியாற்ற தயார் என்று கூறினார். கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும். 2026ம் ஆண்டு புதிய அரசியல் களத்தின் புத்தாண்டு. உறுதியோடு இருங்கள், நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம் என்று கூறினார்.