தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து பல தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே அதிருப்தி ஏற்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு நபர் தனது மகனுடன் தமிழ்நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வந்துள்ளார். இவர் தனது youtube பக்கத்தில் தனக்கு நடந்த சம்பவத்தை பற்றி பேசி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நபர் தனது மகனுடன் இந்தியாவில் உள்ள அனைத்து இடங்களுக்கும் செல்வதாகவும் மேலும் தனது வாகனத்தில் “பாரத் மாதா கி ஜே” என்ற இந்தி எழுத்துக்களை எழுதி இருப்பதால் தாக்கப்பட்டதாகவும் கூறி தனது வருத்தத்தை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோவை பலரும் தமிழகத்தில் அவர் தாக்கப்பட்டதாக பொய்யான செய்திகளை பரப்பி வந்துள்ளனர்.

இந்த வீடியோ குறித்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. இதில், அந்த நபர் தாக்கப்பட்டதாக பேசி வெளியிட்ட வீடியோவில் அந்த சம்பவம் திருப்பதியில் நிகழ்ந்ததாக தெரிவித்துள்ளார் அதன் பின் சென்னைக்கு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். ஆனால் சமூக வலைதளங்களில் இதனை மாற்றி தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் தகவல் சரி பார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் தவறான செய்திகளை பரப்புவது சட்டவிரோதமானது என எச்சரித்தும் உள்ளது.