
இஸ்ரேல்- லெபானன் போர் ஒப்பந்தம் கடந்த ஜனவரியில் தொடங்கி மார்ச் உடன் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து மேலும் 50 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போரில் காசா பகுதியில் உள்ள குழந்தைகள், பெண்கள், பொதுமக்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதலில் இதுவரை 50,000 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் காசா பகுதிக்குள் மக்களுக்கு தேவையான அத்தியாவசியமான உதவிகளை கூட இஸ்ரேல் தடுத்து வருகிறது. இதனிடையே சென்ற வாரம் பாலஸ்தீனியர்கள் வடக்கு காசா பகுதிகளில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஏதிராக காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் வெளியேற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஹமாஸ் அமைப்பு கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் காசாவை நிர்வகித்து வருகிறது.
இதனால் தங்களுக்கு எழுந்துள்ள எதிர்ப்பை ஒடுக்க ஹமாஸ் தீவிரமான அடக்கு முறையில் ஈடுபட்டுள்ளது. அந்த போராட்டத்தில் ஈடுபட்ட பலரையும் பொதுவெளியில் வைத்து சாட்டையடி கொடுத்ததாகவும், 6 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் போராட்டம் நடத்தியவர்களில் பலரை காணவில்லை எனவும் கூறப்படுகிறது. மரண தண்டனை விதிக்கப்பட்ட 6 பேரில் நாசர் ல் ராபியாஸ் (22) என்ற இளைஞரும் ஒருவர்.
அவரது உடலை காசாவின் டெல் அவிவ் பகுதியில் அவரது வீட்டின் முன்பு ஹமாஸ் அமைப்பினர் போட்டுவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. மேலும் ஹமாசை எதிர்ப்பவர்களுக்கு இதுதான் தண்டனை என அவரது குடும்பத்தினரை எச்சரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இஸ்ரேலின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பதிவில், அந்த இளைஞர் கழுத்தில் கயிறு கட்டி இழுத்துச் செல்லப்பட்டு, மக்கள் முன்னிலையில் தடிகளாலும், உலோக கம்பிகளாலும் தாக்கப்பட்டுள்ளார் என பெயர் வெளியிட விரும்பாத காசாவை சேர்ந்த நபர் ஒருவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுபோன்று கடந்த 2019 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளிலும் ஹமாஸுக்கு எதிராக காசாவில் கிளர்ச்சிகள் ஏற்பட்டபோது ஹமாஸ் அமைப்பினர் கடுமையான அடக்குமுறைகளால் கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்தியதாக கூறப்படுகிறது.