ஜம்மு- காஷ்மீரில் அனந்தராத் மாவட்டம் பகல்ஹாமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பதிலடி தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலில் பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாதம் முகாம்கள் குறிவைக்கப்பட்டன. இந்நிலையில் அந்தத் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரிப் நேற்று  அந்நாட்டு பாராளுமன்ற கூட்டத்தில் உரையாற்றினார்.

அந்த உரையில் அவர் தெரிவித்ததாவது, பாகிஸ்தானில் இரவு நேரத்தை பயன்படுத்தி இந்தியா கோழைத்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால் அதற்கு பாகிஸ்தான் ராணுவம் அவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளது. அந்தத் தாக்குதலில் 80 இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தினர். அவற்றில் 3 ரஃபேல் விமானங்கள் உட்பட 5 ஜெட் விமானங்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தி உள்ளது. மேலும் 2 ட்ரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன என தெரிவித்தார்.

மேலும் அந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் செய்தியாளர்களிடம் பேசிய போது, இந்த குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, “இதெல்லாம் இந்திய சமூக ஊடகங்களில் பரவுகிறது, நம்மிடம் எதுவும் இல்லை” என பதிலளித்தார். அந்த பதில் சர்வதேச அளவில் நகைச்சுவையையும், விமர்சனத்தையும் கிளப்பியுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் சமூக வலைதளங்களில் பரவிய சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம் என்ற தலைப்பில் பகிரப்பட்ட புகைப்படம் குறித்து, இந்திய பத்திரிகை தகவல் பணியகம் (PIB) மறுப்பு வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படம் உண்மையில் 2021-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தின் மோகா மாவட்டத்தில் விபத்துக்குள்ளான இந்திய விமானப்படையின் MiG-21 விமானம் என்பதைக் காட்டியது. மேலும் அந்த பதிவில், “தற்போதைய சூழலில் பாகிஸ்தான் ஆதரவு கணக்குகள் பகிரும் பழைய படங்களை நம்ப வேண்டாம்” என்றும், இது தவறான தகவல் பரப்பும் முயற்சி என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், ஆசிப் மேலும் கூறுகையில், “இந்த தாக்குதல் ஒரு தெளிவான எல்லை மீறல்” என்றும், இது “பிராந்திய மோதலை தீவிரமாக்கும் அபாயம் உள்ளதாகவும்” கூறியுள்ளார். இருப்பினும், பாகிஸ்தான் தான் இதனை முழுமையான போராக மாறுவதைத் தவிர்க்க விரும்புகிறது” என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியா தனது தாக்குதல்களை பயங்கரவாத முகாம்களை குறிவைத்தது மற்றும் பாதுகாப்பு நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை எனவே விளக்கி வருகிறது. பாகிஸ்தான் அளிக்கும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் தவறான தகவல்கள், உண்மையை மறைக்கும் முயற்சி என இந்திய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.