ஜம்மு- காஷ்மீரில் உள்ள அனந்தராக் மாவட்டத்தில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை  மூலம் பதிலடி தாக்குதலை நடத்தியது. அந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நேற்று இரவு தாக்குதல் நடத்தப்பட்டது.

அந்தத் துல்லிய தாக்குதலில் 9 பயங்கரவாத உட்கட்டு அமைப்புகள் அழிக்கப்பட்டன. இந்நிலையில் அந்த தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர், 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து ஆயுதப்படைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்த தாக்குதலில் காயம் அடைந்தவர்களுக்கு உதவும் நோக்கத்தில் ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு திரளான இளைஞர்கள் பலர் இன்று ரத்ததானம் அளித்தனர்.

ரத்ததானம் அளிப்பதற்காக அவர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து ரத்ததானம் அளித்தனர். அந்த ரத்த தான நிகழ்வில் கலந்து கொண்ட பாஜக எம்.எல்.ஏ அரவிந்த்குப்தா தெரிவித்ததாவது, ஏதேனும் நிகழ்ந்தால் அதற்கு ரத்த தானம் அளிக்க நாங்கள் அனைவரும் தயாராக இருக்கிறோம் என்றார்.

மேலும் இளைஞர்கள் இதுபோன்று தாமாக முன்வந்து நாட்டுக்காக பங்காற்ற வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். இதனை தொடர்ந்து ரத்த தானம் அளித்த இளைஞர் ஒருவர் கூறியதாவது, இந்த ரத்த தான நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்ததானம் அளித்துள்ளனர். பாகிஸ்தானிய தாக்குதலில் காயம் அடைந்தவர்களுக்கு உதவுவதற்காக இந்த தன்னார்வ ரத்ததான நிகழ்வு நடைபெறுகிறது கூறினார்.

மேலும் ஜம்மு மற்றும் கத்துவா நகரின் பல பகுதிகளில் பொதுமக்கள் தேசியக் கொடிகளை கைகளில் ஏந்தியபடி இந்திய ராணுவ தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்படை ஆகியவற்றை பாராட்டி கோஷங்களை எழுப்பினர். அந்தப் பேரணியை தலைமையேற்று நடத்திய ராஷ்டிரிய பஜ்ரங் தளத்தின் தலைவர் ராகேஷ் குமார் கூறியதாவது, இந்திய ராணுவத்தின் தைரியத்தையும் செயல்திட்ட நடவடிக்கைக்கும் அவர்களை தலைவணங்கும் விதமாக இந்த பேரணி நடைபெறுகிறது என கூறினார்.

மேலும் பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட துல்லிய தாக்குதலை பாராட்டும் வகையில் இந்த பேரணி நடைபெறுகிறது எனவும் கூறினார். இந்திய ராணுவத்தின் ஈடுஇணை அற்ற செயல்பாட்டை பாராட்டி ஜம்முவின் தெருக்களில் தேச பற்றுடன் திரளான பொதுமக்கள் அந்த பேரணியில் கலந்து கொண்டனர்.