
கடந்த 2022-ஆம் ஆண்டு இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டவர்களில் 72 சதவீதம் ஆண்கள் என தேசிய குற்றப்பதிவுப் பணியகத்தின் (NCRB) தரவுகள் தெரிவித்துள்ளன. இது ஆண்களின் மனநலப் பிரச்சனைகள் குறித்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமுதாயத்தில் ஆண்கள் தங்கள் உணர்வுகளை வெளிக்காட்டாமல் அடக்கிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது. தங்கள் பிரச்சனைகளை பகிர்ந்துகொள்ளும் சுதந்திரம் இல்லாமல் அவர்கள் அமைதியாக மன அழுத்தத்துடன் வாழ்கிறார்கள், பல சந்தர்ப்பங்களில் கடைசி முடிவாக தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
இது பற்றி ‘மனஸ்தலி’ அமைப்பின் நிறுவனர் மற்றும் மூத்த மனநல மருத்துவரான டாக்டர் ஜோதி கபூர் கூறுகையில், “ஆண்களுக்கு சமூகப் பழக்கவழக்கங்கள் பலவீனங்களை வெளிக்காட்ட கூடாது என கட்டாயப்படுத்துகிறார்கள். இதனால், அவர்கள் துன்பங்களை அடக்கிக் கொண்டு அமைதியாக வாழ்வதால் அவை அவர்களை முழுமையாக உடைத்துவிடும் நிலையில் தள்ளப்படுகிறார்கள்” என்றார். மனநல உரையாடல்களை இயல்பாக்குவது, மருத்துவச் சேவைகளை வழங்குவது மற்றும் உணர்ச்சி வெளிப்பாட்டிற்கு ஏற்ற சூழலை வீட்டிலும் பணியிடத்திலும் உருவாக்குவது முக்கியம் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், ‘சீம்லெஸ் மைண்ட்ஸ்’ கிளினிக் மற்றும் ‘பராஸ் ஹெல்த்’ நிறுவனத்தின் ஆலோசகர் டாக்டர் ப்ரீத்தி சிங் கூறுகையில், தவறான குற்றச்சாட்டுகள், வீட்டு வன்முறை, உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம் போன்றவை ஆண்களின் மனநலத்தில் தீவிர தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கடந்த 2013-14 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் 53.2% பொய்யானவை எனத் தெரியவந்தது. இதனால் பாதிக்கப்படும் ஆண்களில் மனச்சோர்வு, பதட்டம், நீண்டநாள் மன அழுத்தம் போன்ற நிலைகள் ஏற்படுவதைக் காணலாம் என அவர் சுட்டிக்காட்டினார். மேலும் சமூகமும், சட்டமும் ஆண்களின் உணர்வுகளையும் பாதுகாப்பதற்கான மாறுதல்களை கொண்டுவர வேண்டிய அவசியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதை இவை உணர்த்துகிறது என்று கூறியுள்ளனர்.