தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்த பாண்டியன்(73) என்பவர் பல்வேறு இடங்களுக்கு சென்று யாசகம் பெற்று வாழ்ந்து வருகிறார். இவரது மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். சில இடங்களில் பாண்டியன் முடிந்த அளவு வேலை பார்த்து சம்பாதித்து வருகிறார். இந்நிலையில் தனக்கு தேவையான பணத்தை எடுத்துக்கொண்டு, மீதம் இருக்கும் பணத்தை பாண்டியன் சமூக சேவைக்காக கொடுத்து வந்துள்ளார். ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆட்சியர் மூலமாக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு அவர் 10 ஆயிரம் ரூபாய் வழங்கி வந்துள்ளார்.

நேற்று காலை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று பாண்டியன் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பத்தாயிரம் ரூபாயை அனுப்பினார். பின்னர் அந்த ரசீதை ஆட்சியரிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து அவர் கூறும் போது, நான் யாசகம் பெற்று தேவையான செலவுக்கு மட்டும் அதனை எடுத்துக் கொள்வேன் . மீதமுள்ள பணத்தை சமூக சேவைக்காக இதுவரை 35 மாவட்ட கலெக்டரிடம் வழங்கி இருக்கிறேன். 36-வதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து பணத்தை கொடுத்து விட்டேன். இதுவரை 50 லட்ச ரூபாய் நிவாரணமாக வழங்கியுள்ளேன் என கூறினார்.