
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள டாமோ மாவட்டத்தில் வசித்து வரும் இளைஞர் பிரின்ஸ் சுமன். இவர் அப்பகுதியில் முட்டை வியாபாரம் செய்யும் வியாபாரி. இந்நிலையில் சுமனுக்கு வருமான வரித்துறையிலிருந்து நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீசை பார்த்ததும் பிரின்ஸ் சுமன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
அந்த நோட்டீஸில், பிரின்ஸ் சுமனின் பெயரில் “பிரின்ஸ் என்டர்பிரைசஸ்” என்ற நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டு டெல்லியில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனத்தின் மூலம் மரம், தோல் மற்றும் இரும்பு உற்பத்தி விற்பனை செய்யப்பட்டு ரூபாய் 50 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாகவும், ஆனால் அந்த நிறுவனம் வருமான வரித்துறைக்கு இதுவரை எந்தவித ஜிஎஸ்டியும் செலுத்தாமல் இருந்து வந்துள்ளதால் ரூபாய் 6 கோடிக்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக” தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து பிரின்ஸ் சுமன் கூறியதாவது, “நான் என் வாழ்நாளில் ஒருபோதும் டெல்லிக்கு சென்றதே இல்லை. கடந்த 2023 இல் இந்தூரில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தேன். அதன் பின் தற்போது பாதிரியா நகரில் முட்டை வியாபாரியாக உள்ளேன். எனது ஆதார் அல்லது பான் கார்டு விவரங்களை இதுவரை யாரிடமும் கொடுத்ததில்லை”என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுமனின் தந்தை ஸ்ரீதர் சுமன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். மேலும் இவர்களது வழக்கறிஞர் அபிலாஷ் இது ஒரு திட்டமிட்ட மோசடி என்றும் வருமான வரித்துறைலும் இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.