கன்னியாகுமரி மாவட்டம் விளாக்கோடு பகுதியில் ஆன்றனி ரமேஷ் (45) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர் காங்கரை பகுதியில் ஸ்டூடியோ ஒன்றை வைத்திருக்கிறார். இந்நிலையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் புத்தன் கடை ஆர் சி தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு அவருடைய மகன் எய்டன் நினோ கட்டிலில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது கட்டிலில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்ததால் மயக்கமடைந்தான். குழந்தை விழுந்ததை கண்ட உறவினர்கள் உடனடியாக குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சை வழங்கினர். ஆனால் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.