
ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டக் நகரை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் டெல்லியை சேர்ந்த நைஜீரிய நாட்டவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து கட்டக் காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது, கடந்த மார்ச் 1-ம் தேதி பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் குடும்பத்தினர் தரகபஜார் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இந்த விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட பெண் குறிப்பு ஒன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
அந்தக் குறிப்பில் பாதிக்கப்பட்ட பெண் சர்வதேச மற்றும் இந்திய whatsapp எண்கள் சிலவற்றை குறிப்பிட்டு தன்னுடைய தனிப்பட்ட புகைப்படங்களை ஆபாசமான பாலியல் உறவு முறையில் சித்தரித்து தன்னை ஏமாற்றி, மிரட்டி பணம் பறிப்பதாகவும், இதனால் தனக்கு மன அழுத்தம் அதிகமானதால் தற்கொலைக்கு முடிவெடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்ட எண்களின் அடிப்படையில் சைபர் காவல் துறையினர் அந்த எண்களை பயன்படுத்துவோரின் தகவல்களையும், அதன் மூலம் பயன்படுத்தப்பட்ட மொபைல் எண்களையும் கண்காணித்து வந்தனர்.
இதில் டெல்லியில் உள்ள உத்தம் நகரைச் சேர்ந்தவர் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சிறப்பு காவல் படை டெல்லிக்குச் சென்று கடந்த மார்ச் 21ஆம் தேதி அன்று அந்த நபரை கைது செய்தனர். அதன்பின் நடத்திய விசாரணையில் அவர் தன்னை ஐவரி கோஸ்ட் நாட்டை சேர்ந்தவர் என கூறியுள்ளார். ஆனால் அவர் நைஜீரிய நாட்டின் குடிமகன் என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து ஒரு லேப்டாப், 5 மொபைல் போன்கள், 8 சிம் கார்டுகள் மற்றும் வெளிநாட்டு பாஸ்போர்ட்கள் போன்றவற்றை காவல்துறையினர் கைப்பற்றினர். இதனை தொடந்து அந்த நபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.