சேலம் மாவட்டத்தில் உள்ள காவேரி கிராஸ் பகுதியில் ஆறுமுகம்(49) -சாந்தி(38) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 1 மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இவர்கள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். தந்தை ஆறுமுகம் கம்பி கட்டும் வேலை பார்த்து வருகிறார். தற்போது கோடை விடுமுறை என்பதால் இவர்கள் குடும்பத்தோடு ஓமலூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர்.

அப்போது ஆறுமுகத்தின் மகன் ஓமலூரில் உள்ள சிற்றுண்டியில் 4 பாட்டில் ஜூஸ் வாங்கி வந்தார். அதனை வீட்டிலிருந்த அனைவரும் குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென பிரியதர்ஷினி என்பவருக்கு வாயில் ஏதோ தட்டுப்பட்டதால் உடனடியாக ஜூஸை வெளியே துப்பினார். அப்போது அதில் பல்லி போன்ற உருவம் தெரிந்தது. அதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சிற்றுண்டிக்கு சென்று வாக்குவாதம் செய்தனர்.

பின்னர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் இது தொடர்பாக புகார் அளித்தனர். இந்நிலையில் ஜூஸை குடித்த சிறுமிக்கு வாந்தி பேதி ஏற்பட்ட நிலையில் மற்றொரு நபருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.