
வங்கதேச அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து அணி..
2023 உலக கோப்பையின் 11வது போட்டியில் இன்று நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் சென்னை சேப்பாக் சிதம்பரம் மைதானத்தில் மோதியது. கடந்த இரண்டு போட்டிகளில் ஆடாத வில்லியம்சன் இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டனாக களமிறங்கினார். இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி வங்கதேச அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய லிட்டன் தாஸ் டிரென்ட் போல்டின் முதல் ஓவரின் முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். இதையடுத்து தன்சித் ஹசன் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் இருவரும் ஜோடி சேர்ந்து சிறிது நேரம் ஆடிய நிலையில், தன்சித் ஹசன்16 ரன்களில் வெளியேறினார்.
அதனைத்தொடர்ந்து மெஹிதி ஹசன் மிராஸ் 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஷாண்டோ 7 ரன்னில் நடையை கட்டினார். வங்கதேச அணி 12.1 ஓவரில் 56 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்தது. அப்போது கேப்டன் ஷகிப் அல் ஹசன் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் இருவரும் ஜோடி சேர்ந்து பொறுமையாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதையடுத்து பெர்குசன் 30வது ஓவரில் 152 ரன்கள் இருந்தபோது இந்த ஜோடியை பிரித்தார். ஷகிப் அல் ஹசன் 40 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். பின் மறுமுனையில் பொறுப்புடன் ஆடி அரைசதமடித்த முஷ்பிகுர் ரஹீம் 66 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த டவ்ஹித் ஹ்ரிடோய் 13, தஸ்கின் அகமது 17, முஸ்தபிசுர் ரஹ்மான் 4 ரன்கள் என அடுத்தடுத்த அவுட் ஆன போதிலும், கடைசியில் மஹ்முதுல்லாஹ் 41 ரன்கள் சேர்த்து அவுட் ஆகாமல் கடைசி வரை களத்தில் நின்றார்.. மேலும் ஷோரிஃபுல் இஸ்லாம் 2 ரன்னில் அவுட் ஆகாமல் இருந்தார். இறுதியில் வங்கதேச அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக லாக்கி பெர்குசன் 3 விக்கெட்டுகளும், ட்ரெண்ட் போல்ட் மற்றும் மேட் ஹென்றி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், மிட்செல் சான்ட்னர், கிளென் பிலிப்ஸ் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்களாக டேவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் களமிறங்கி ஆடினர். இதில் முஸ்தபிசுர் ரஹ்மான் வீசிய 3வது ஓவரில் ரச்சின் 9 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து கான்வே மற்றும் கேன் வில்லியம்சன் ஜோடி பொறுப்பாக ரன்கள் சேர்த்தது. பின் கான்வே 45 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி 20.1 ஓவரில் 92 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்திருந்தது. அதன்பின் டேரில் மிட்செல் மற்றும் கேன் வில்லியம்சன் இருவரும் கைகோர்த்து பொறுப்பாக ஆடி இலக்கை துரத்தினர். வங்கதேச அணியால் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.
இந்த ஜோடி 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பின் அரைசதமடித்த கேன் வில்லியம்சன் அணியின் ஸ்கோர் 200 ஆக இருந்தபோது ரிட்டையர் ஹர்ட் ஆனார். வில்லியம்சன் 78 ரன்கள் எடுத்து பெவிலியனுக்கு சென்றார். அதன்பின் அரைசதமடித்த டேரில் மிட்செல் மற்றும் பிலிப்ஸ் இணைந்து அணியை வெற்றிபெற வைத்தனர். நியூசிலாந்து அணி 42.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. டேரில் மிட்செல் 67 பந்துகளில் (6 பவுண்டரி, 4 சிக்ஸர்) 89 ரன்களுடனும், பிலிப்ஸ் 16 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். நியூசிலாந்து அணி தொடர்ந்து 3 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு சென்றுள்ளது..