
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டம், 2015 ஆம் ஆண்டில் மத்திய மோடி அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம், குறைந்த வருமானம் உள்ள குடும்பங்கள் மற்றும் நலிவடைந்த சமூகங்களுக்கு மலிவு விலையில் அல்லது இலவசமாக வீடுகளை வழங்குவதற்கான முயற்சியாகும். நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என இரண்டு பிரிவுகளில் வழங்கப்படும் வீடுகள், இதுவரை 5 கோடி வீடுகளை கட்டி வழங்கியுள்ளன. தற்போது, மேலும் 3 கோடி வீடுகள் கட்டுவதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் வீடு பெற விரும்புவோர், pmaymis.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனாக பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பிக்கும் போது ஆதார் அட்டை, பான் கார்ட், வாக்காளர் ஐடி போன்ற அடையாள ஆவணங்கள் மற்றும் வருமானச் சான்றிதழ் தேவைப்படும். விண்ணப்பத்தின் படிவத்தை முழுமையாக நிரப்பிய பிறகு, உங்கள் தகவல்களைச் சரிபார்க்க வேண்டும். அனைத்து விவரங்களும் சரியானவையாக இருந்தால், விண்ணப்பம் நிலுவையில் இருக்கும்.
2024-25 நிதியாண்டுக்கான பிரதான் மந்திரி கிராமம் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 10 லட்சம் பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 100 நாள் திட்டமாக செயல்படுத்தப்படுகிறது; அதாவது, 100 நாட்களில் வீடு கட்டி முடிக்க வேண்டும். இதனால், வீடு இல்லாதவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும், மேலும் அவர்கள் தங்களது சொந்த வீடு கனவுகளை நனவாக மாற்ற முடியும்.