இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் என்பதால் ரயில்வே துறை புதிய முடிவை மேற்கொண்டுள்ளது. இம்முடிவில் 17 மண்டல ரயில்வே அமைப்புகளுக்கும் கடிதம் அனுப்பி உள்ளது. பண்டிகை கால விடுமுறைகளில் மக்கள் கூட்டம் ரயில் போக்குவரத்தையே பெரிதும் நாடி செல்வர். குடும்பத்துடன் சௌகரியமாக செல்வதற்கு ரயில் பயணமே சிறந்ததாகும். இதனால் பயண சீட்டு எடுக்காமல் பயணம் புரிவோரை தடுக்க ரயில்வே துறை தீவிர கண்காணிப்பு அமைப்பை உருவாக்க உள்ளது.

இதன் மூலம் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பது, முன்பதிவு செய்தோரின் இடத்தில் ஆக்கிரமிப்பு செய்வது போன்ற சட்டவிரோதமான செயல்களை மேற்கொள்வோரை கண்டுபிடிப்பதற்காக உருவாக்கப்பட உள்ளது. மேலும் உயர் பதவியில் உள்ளோர், காவல்துறையினர் பயணச்சீட்டு இல்லாமல் ஏசி கோச்சில் பயணிப்பது போன்ற விதிமிறல்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தடுப்பதற்காக ரயில்வே துறை 17 மண்டல ரயில்வே அமைப்புகளுக்கும் எழுதிய கடிதத்தில் உள்ளதாவது,

வருகிற அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையிலும் மற்றும் அக்டோபர் மாதம் 25ஆம் தேதி முதல் நவம்பர் 1ஆம் தேதி வரையிலும் ரயில்களில் பயண சீட்டுகள் எடுக்காமல் பயணிப் போரின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க சிறப்பு குழுக்கள் அமைக்க வேண்டுமெனவும் மேலும் பயணச்சீட்டு இல்லாத நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி 2023-24 இல் மட்டுமே பயணச்சீட்டு இல்லாமல் அபராதம் பெற்று நபர்களின் எண்ணிக்கை 3.61 கோடி ஆகும். அதாவது கிட்டத்தட்ட அபராதம் மட்டுமே ரூபாய் இரண்டு கோடிக்கு மேல் பெறப்பட்டுள்ளது.