பெங்களூரில் வாழும் இளைஞர் ஒருவர் தனக்கு ரூ.1.5 லட்சம் மாத வருமானம் இருந்தும், நிதி பாதுகாப்பு இல்லாத நிலைமையை பற்றி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் தனது குடும்ப செலவுகள், கடன் தவணைகள் (EMI), மற்றும் நகர்ப்புற வாழ்க்கையின் உயர்ந்த செலவுகள் காரணமாக, மாதத்திற்கு ரூ.30,000 – 40,000 மட்டுமே சேமிக்க முடிகிறது என்று தெரிவித்தார். உயர்ந்த வாடகை கட்டணங்களால், அவரும் அவரது வருங்கால மனைவியும் இன்னும் PG குடியிருப்பில் தங்கியிருக்கின்றனர்.

இந்நிலையில் உணவு, போக்குவரத்து, மருத்துவ செலவுகள் அதிகரித்துள்ளதால், நிதி நிலைமை மோசமடைவதை அவர் உணர்ந்திருக்கிறார். எனவே சிறு வயதில் பெங்களூரில் ஒரு வசதியான வாழ்க்கை வாழ்வது கனவாக இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் அது மிகப்பெரிய சவாலாக மாறிவிட்டது என்று அவர் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவு, நகர்ப்புறங்களில் வாழும் பல இளம் தொழிலாளர்களின் நிலையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. “வருமானம் என்பது செல்வம் அல்ல, உண்மையான நிதி பாதுகாப்பு தலைமுறை செல்வம் கொண்டவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்” என்ற கருத்து, இந்த யதார்த்தத்தை உணர்த்துகிறது.

கடந்த 2021 முதல் 2024 முடிய, பெங்களூரில் வீட்டு வாடகை 76% வரை உயர்ந்துள்ளதே, இளைஞர்கள் உயர்ந்த சம்பளம் பெற்றாலும், அடிப்படை வசதிகளை கூட சமாளிக்க முடியாமல் இருப்பதற்குக் காரணமாக உள்ளது. இதிலிருந்து பெங்களூரு கனவு என்பது இப்போது சுகபோக வாழ்க்கை அல்ல, வெறும் உயிர்வாழ்வதே மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது என்பது பல இளம் தொழிலாளர்களின் உண்மை நிலையாகியுள்ளது.