அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த டிம் ஃபிரீட் என்ற நபர், கடந்த 18 ஆண்டுகளாக தனது உடலுக்கு பல்வேறு விஷப்பாம்புகளின் விஷங்களை செலுத்திக்கொண்டு, தனக்கு தானே உரிய நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துள்ளார்.

2001ம் ஆண்டு தனது பயணத்தை துவங்கிய அவர், உலகின் மிகவும் விஷம் கொண்ட பாம்புகளை தனது உடலில் கடிக்க வைத்துள்ளார். இவரது இந்த ஆபத்தான சோதனைகள் தற்போது மருத்துவ உலகிற்கு புதிய வழிகாட்டுதலாக மாறியுள்ளது.

இவரது ரத்தத்தில் காணப்படும் ஆன்டிபாடிகள் பல்வேறு விஷப்பாம்பு வகைகளுக்கு எதிராக போராடும் தன்மையை கொண்டுள்ளன என கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பிரபல நோயியல் நிபுணர் ஜேகப் க்லான்வில் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியர் பீட்டர் குவாங் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட ஆய்வில், டிம் ஃபிரீட்டின் ரத்தம் 19 வகை விஷப்பாம்பு வகைகளுக்கு எதிராக ஒரு பரந்த பாதுகாப்பு அளிக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. பாரம்பரியமாக பாம்பு விஷ மருந்துகள் விலங்குகளில் தயாரிக்கப்படுவது வழக்கம்.

ஆனால், மனிதரின் ரத்தத்தில் இருந்து பெறப்பட்ட ஆன்டிபாடிகளால் உருவாக்கப்பட்ட இந்த புதிய மருந்து, உலகளவில் பல்வேறு வகை பாம்பு கடிக்கு ஒரே மருந்தாக பயன்படும் வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இது மருத்துவ வரலாற்றில் ஒரு பெரிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.