உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தியாவில், நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு அக்டோபர் 3 முதல் 11 வரை அனைத்து இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நகர உணவுப் பாதுகாப்பு ஆணையர் மாணிக் சந்த் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். உத்தரவின்படி கோழி, ஆடு மற்றும் மீன் போன்ற அனைத்துப் இறைச்சி கடைகளும் இக்காலப்பகுதியில் மூடப்படும்.

தடையை மீறுபவர்களுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டத்தின் கீழ் கடுமையான சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் தடை காலத்தில் இறைச்சி விற்பனை நடைபெறுவதை காணப்பட்டால், உடனடியாக அறிவிக்கும்படி துறை கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக குறிப்பிட்ட தொலைபேசி எண்ணையும் வெளியிட்டுள்ளனர்.

நல்லதோர் சமுதாயத்திற்கு, இறைச்சி மற்றும் மது விற்பனையையும் தடுக்க வேண்டும் எனப் பல ஆண்டுகளாக அயோத்தியாவில் சாமியார்கள் கோரிக்கை வைத்துவந்தனர். குறிப்பாக மதவழிபாட்டு மையங்களின் சுற்றுப்பகுதியில் இவ்வாறு தடை விதிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், இறைச்சி உணவு உடல் மற்றும் மனதை மாசுப்படுத்தும் என சில மதவாதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.