திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்திலிருந்து ஒரு தனியார் பேருந்து புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை பிரபு என்பவர் ஓட்டி சென்ற நிலையில் கனகம்பட்டி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பிரபுவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் மயங்கி விழுந்தார்.

உடனடியாக நடத்துனர் விமல் பேருந்தில் உள்ள பயணிகளின் உயிரை காப்பதற்காக பிரேக்கை கையினால் அழுத்தி பேருந்தை நிறுத்தினார். அதன் பின் ஓட்டுநர் பிரபுவை தட்டி எழுப்ப முயன்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பிரபுவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து நடத்துனர் விமல் செய்தியாளர்களிடம் கூறும் போது “ஓட்டுநர் பிரபு தனக்கு நெஞ்சு வலிக்கிறது என கூறிக் கொண்டே மயங்கி விழுந்துவிட்டார். உடனடியாக நான் பிரேக் பிடித்து பேருந்தை நிறுத்தினேன். இதனால் பேருந்திலிருந்த பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது. ஆனால் என்னால் பிரபுவை காப்பாற்ற முடியவில்லை” என வருத்தத்துடன் கூறினார்.

மேலும் இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.