அமெரிக்காவின் லூயிசியானா மாநிலத்தில் 1970ஆம் ஆண்டு ஒரு குழந்தையின் மரணத்தை தொடர்ந்து மூடி மறைக்கப்பட்ட வழக்கு, 54 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விசாரிக்கப்பட்டதில் அந்த குழந்தையின் தாயாரே கொலை செய்ததாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அலீஸ் பஞ்ச் இட்லெட் என்ற 75 வயது பெண், கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளார். 1970 ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி, 4 மாதமான ஈரல் பஞ்ச் III என்ற குழந்தை பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். தொடக்கத்தில் அவர் தொட்டிலில் இருந்து விழுந்து பலத்த காயமடைந்ததாகக் கூறப்பட்டிருந்தது.

அப்போது குழந்தையின் தந்தை ஈரல் பஞ்ச் ஜூனியர், தாய்லாந்தில் பணியில் இருந்ததால், சம்பவம் குறித்த முழுமையான தகவல் கிடைக்கவில்லை. இருப்பினும், 2022ல் குழந்தையின் குடும்பத்தின் கோரிக்கையின் பேரில் வழக்கை மீண்டும் விசாரிக்க சல்ஃபர் போலீசார் தொடங்கினர். குழந்தையின் புதைக்கப்பட்ட உடல் வெளியே எடுக்கப்பட்டு, போஸ்ட்மார்டம் மூலம் கொலை என உறுதி செய்யப்பட்டது.

அதுமட்டுமன்றி, தாயான அலீஸ் எழுதிய கடிதங்கள், குழந்தையை வெறுத்தது, விருப்பமின்றி தாயாகியதாக தெரிவித்து, “தன் மகன் இறந்தாலும் எனக்குக் கவலை இருக்காது” என்று கூறியது எல்லாம் வெளிச்சத்துக்குவந்தன. 1970 ஆம் ஆண்டு அவசர சிகிச்சையில் சேர்க்கப்பட்டபோது குழந்தையின் தலையும் தோள்பட்டையிலும் பல இடங்களில் முறிவு ஏற்பட்டிருந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தற்போது, அலீஸ் இட்லெட் போலீசார் காவலில் வைத்துள்ளனர்.