
கனடாவில் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டு கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதை இந்தியா மறுத்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டது. இதற்கிடையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும் என்று கனடா தெரிவித்தது. அதன் பின்னர் உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கும் இந்த கொலையில் தொடர்பு உள்ளதாக கனடா குற்றம் சாட்டியது. இந்நிலையில் தற்போது பிரதமர் மோடி மீதும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது காலிஸ்தான் தலைவரை கொள்ளும் சதி செயல் குறித்து பிரதமருக்கு தெரியும் என்று கனடா ஊடகமான தி குளோப் அண்ட் மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சதி திட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் வெளி விவகார அமைச்சர் ஆகியோரும் இருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து செய்தி தொடர்பாளர் ஜெய்ஸ்வால் கூறியதாவது, நாங்கள் பொதுவாக ஊடக அறிக்கைகள் குறித்து கருத்து தெரிவிப்பதில்லை. இருப்பினும் கனடா அரசு ஆதாரம் இல்லாமல் ஒரு செய்தி தாளில் கூறப்படும் இது போன்ற கேள்விக்குறியான அறிக்கைகளை நிராகரிக்க வேண்டும். இதுபோன்ற பிரச்சாரங்கள் ஏற்கனவே சிதைந்து விட்ட இருநாட்டு உறவுகளை மேலும் சேதப்படுத்துகின்றன என்றார்.