மகாராஷ்டிராவில் நடைபெற்ற தேர்தலில் மகாயுதி கூட்டணி அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. இந்நிலையில் கடந்த டிசம்பர் 5ம் தேதி முதலமைச்சராக தேவேந்திர பாட்னாவிஸும், துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் பதவியேற்றனர். அதன் பின்னரும் இலாகா மற்றும் அமைச்சர்கள் தொடர்பான இழுபறி நீடித்து வந்தது. இதையடுத்து அமைச்சரவை தொடர்பாக தேவேந்திர பாட்னாவிஸும், ஏக்நாத் ஷிண்டேவும் ஆலோசனை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து புதிய அமைச்சரவையில் பாஜகவை சேர்ந்த 19 பேரும், சிவசேனாவை சேர்ந்த 11 பேரும், தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த 9 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்நிலையில் அம்மாநில பந்தாரா-பவானி தொகுதியில் 38 ஆயிரம் வாக்குகள் பெற்றது. இதனால் சிவசேனா வெற்றி பெற்றது. ஆனால் எம்.எல்.ஏ நரேந்திர போண்டேகருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இதனால் அவர் அக்கட்சியில் உள்ள அனைத்து பதவிகளிலும் இருந்து விலகினார்.

இந்த தொகுதியில் அவர் மூன்று முறை எம்எல்ஏவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில் அவருக்கு அமைச்சர் பதவி தருவதாக ஏக்நாத் ஷிண்டே கூறினார். ஆனாலும் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, அவர் பெயர் விடுபட்டுள்ளது. இதுகுறித்து அவர், ஏக்நாத் ஷிண்டேவிடம் கேள்வி கேட்டார். ஆனால் அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் அவர் அந்த பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இருப்பினும் அவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யவில்லை.