
உலகின் முன்னணி டெக் நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரும் முதலீடு செய்யும் நிலையில், தனது பணியாளர்களில் சுமார் 6,000 பேரை, அதாவது மொத்த ஊழியர்களின் 3% க்கும் குறைவானவர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது, 2023 ஆம் ஆண்டு 10,000 பேரை பணிநீக்கம் செய்ததற்குப் பிறகு, மைக்ரோசாப்ட் மேற்கொள்ளும் மிகப்பெரிய கட்டுப்பாட்டு நடவடிக்கை எனக் கருதப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மீது மிகுந்த நம்பிக்கையுடன் செயல்படும் மைக்ரோசாப்ட், இந்த நிதியாண்டில் மட்டும் $80 பில்லியன் முதலீட்டை ஒதுக்கியுள்ளது. இதில் பெரும்பகுதி தொகை, டேட்டா சென்டர் விரிவாக்கம் மற்றும் AI உள்கட்டமைப்பு மேம்பாடுகளுக்காக செலவிடப்பட இருக்கிறது.
ஆனால், இந்த முதலீடுகளால் ஏற்படும் லாப அழுத்தங்களை சமாளிக்க, மற்ற செலவுகளில் கட்டுப்பாடு தேவைப்படுவதால் தான், நிறுவன மாற்றங்களின் ஒரு பகுதியாக இந்த பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என மைக்ரோசாப்ட் செய்தித் தொடர்பாளர் விளக்கியுள்ளார். 2024 மார்ச் காலாண்டில் Azure கிளவுட் சேவைகளில் வலுவான வளர்ச்சி இருந்தாலும், அதன் லாப வரம்புகள் 72%-இலிருந்து 69%-க்கு குறைந்ததுதான் தற்போது ஏற்பட்டுள்ள அழுத்தத்தின் பிரதிபலிப்பு என நிபுணர்கள் கூறுகின்றனர்.
DA டேவிட்சன் நிறுவனத்தின் ஆய்வாளர் கில் லூரியா, “இந்த வகை AI முதலீடுகள் மேற்கொள்ளப்படும்போது, மைக்ரோசாப்ட் ஆண்டு தோறும் குறைந்தது 10,000 பணியாளர்களை குறைக்க வேண்டிய நிலைக்கு போகலாம்” என கவலை தெரிவித்துள்ளார். Google, Meta, Amazon போன்ற பல பிக் டெக் நிறுவனங்களும், கடந்த ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான ஊழியர்களை AI முன்னுரிமையின் பெயரில் பணிநீக்கம் செய்துள்ள நிலையில், மைக்ரோசாப்ட் எடுத்துள்ள இந்த நடவடிக்கையும் தொழில்நுட்ப உலகில் பெரும் பேசுபொருளாகி வருகிறது.