
வேலூர் கேகே நகர் பகுதியில் சபீனா பானு என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தற்போது தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். அப்போது அதே கம்பெனியில் வேலை பார்த்து வரும் சுரேஷ் என்பவரை காதலித்து வந்தார்.
அவர்களுக்கிடையேயான நெருக்கம் அதிகமான நிலையில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அந்த நேரத்தில் சுரேஷ் 6 மாதங்களாக வேலைக்கு செல்லாத காரணத்தினால் சபீனா பானு அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால் மன வேதனையடைந்த சுரேஷ், சபீனாவை தொடர்பு கொண்ட போது அவரால் பேச முடியவில்லை. இந்நிலையில் நேற்று இரவு நேரடியாக சபீனா பானுவின் வீட்டிற்கு சென்ற சுரேஷ் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அந்த வாக்குவாதம் முற்றி தகராறாக மாறிய நிலையில் கோபமடைந்த சுரேஷ் தான் கொண்டு வந்த இரும்பு கம்பியால் சபீனா பானுவை அடிக்க முயன்ற போது சபீனா பானுவின் தந்தை தடுத்து நிறுத்தினார். அந்த சமயத்தில் சுரேஷ் சபீனா பானுவின் தந்தை தாய் இருவரையும் கம்பியால் தாக்கியதால் அவர்கள் இருவரும் மயக்கம் அடைந்தனர். அப்போது தனது உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக சபீனா பானு வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் பின்னால் சென்ற சுரேஷ் அவரை சரமாரியாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் காவல் துறையினருக்கு தெரிய வந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் சுரேஷின் மொபைல் எண்ணை வைத்து தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அவரது வீட்டுக்கு சென்று பார்த்தபோது அங்கு சுரேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் சுரேஷ் மற்றும் சபீனா பானுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் பலத்த காயமடைந்த நிலையில் மயங்கி கிடந்த சபீனா பானுவின் தாய் மற்றும் தந்தையை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.