கோவை மாவட்டத்தில் 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு தன்னுடைய தோழி மூலம் கோவையை சேர்ந்த சூர்யா என்று வாலிபருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இவர்கள் நண்பர்களாக பழகி வந்த நிலையில் அந்த வாலிபர் மாணவியிடம் நான் உன்னை காதலிக்கிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்த நிலையில் அந்த மாணவன் தொடர்ந்து மாணவியை கட்டாயப்படுத்தி வந்துள்ளான். இதைத் தொடர்ந்து அந்த மாணவி தனது தோழிக்காக கல்லூரியின் அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த சூர்யா தன்னுடைய காதலை ஏற்றுக் கொள்ளுமாறு அந்த மாணவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி தனது தம்பியிடம் நடந்ததை கூறினார். இதனால் அந்த மாணவியின் தம்பி தனது நண்பர்களுடன் சென்று சூர்யாவை கண்டித்தார். இந்நிலையில் சம்பவ நாளில் அந்த மாணவியின் தம்பி போத்தனூரில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சூர்யா தனது நண்பர்களுடன் சேர்ந்து அவரை காரில் கடத்தி சென்றார்.

அதன்பின் சூர்யா அந்த மாணவியை தொடர்பு கொண்டு “நீ என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் உனது தம்பியை கொலை செய்து விடுவேன்” என்று மிரட்டியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த மாணவி அவரது தம்பியின் நண்பர்களுடன் செட்டிபாளையத்திற்கு சென்றார். அங்கு காரில் வந்த சூர்யா மாணவிக்கு மொபைல் மூலம் தொடர்பு கொண்டு “உன் தம்பியின் நண்பனான தருணை எங்களிடம் ஒப்படைத்துவிட்டு உன் தம்பியை அழைத்து செல். இல்லையென்றால் அவனை கொன்று விடுவேன்” என்று மிரட்டி உள்ளார்.

இதனை கேட்டு பயந்து போன அந்த மாணவி கத்தி கூச்சலிட்டார். இவரது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த நிலையில் சூர்யா அந்த மாணவியின் தம்பியை அங்கேயே விட்டுவிட்டு காரில் தப்பி சென்றார். இது தொடர்பாக சூர்யா மீது அந்த மாணவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது சூர்யாவின் நண்பர்களான திருமுருகன், கலையரசன், சங்கர் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் முக்கிய குற்றவாளியான சூர்யா தலைமறைவான நிலையில் காவல்துறை அவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.