
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோமங்கலம் பூசாரிபட்டியை சேர்ந்த 21 வயது மாணவி அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி வழக்கம் போல கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாததால் பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த மாணவி பி.ஏ.பி வாய்க்கால் பகுதியில் கத்தி குத்து காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டார். அதன் பின் நடந்த பிரேத பரிசோதனையில் மாணவி கற்பழிக்கப்பட்டு கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், அந்த மாணவிக்கு சென்னையை சேர்ந்த ஒரு இளைஞருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்ததும், இதனிடையில் அந்த மாணவியின் தூரத்து உறவினரான சதீஷ்குமார் (28) என்பவர் அந்த மாணவியை திருமணம் செய்து கொள்ள விரும்பி அவரது பெற்றோரிடம் பெண் கேட்டுள்ளதும் தெரிய வந்தது. ஆனால் சரியான வேலை இல்லாத காரணத்தினால் பெற்றோர்கள் சதீஷ்குமாருக்கு பெண் கொடுக்க மறுத்துவிட்டனர்.
இதனை அடுத்து சதீஷ்குமாருக்கு திருமணம் நடந்து ஒரு குழந்தையும் உள்ளது. இருப்பினும் சதீஷ்குமார் அந்த மாணவியின் மீது இருந்த மோகத்தை கைவிடாமல் அந்த மாணவியை விரும்பி வந்துள்ளார். இதனால் சம்பவநாளன்று மாணவி படித்து வந்த கல்லூரிக்கு சென்றுள்ளார். அவரிடம் ஊரில் கொண்டு விடுவதாக கூறி காரில் ஏற்றி சென்று பி.ஏ.பி வாய்க்கால் அருகே வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்து கத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார்.
இந்நிலையில் சதீஷ்குமாரை கைது செய்து அவர் மீது கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட வழக்குகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கோயம்புத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி நந்தினி தேவி அமர்வின்கீழ் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் ஜிஷா ஆஜர் ஆகி பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணிற்காக வாதாடினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட சதீஷ்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.