
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தேசவிரோத அமைப்புகளுடன் தொடர்புடையதாக புகார் எழுந்த துஃபைல் ஆலம் என்பவர், மாநில பயங்கரவாத தடுப்பு படையினரால் (ATS) கைது செய்யப்பட்டுள்ளார். தோஷிபுரா பகுதியில் வசிக்கும் துஃபைல், பாகிஸ்தானில் இருந்து இயங்கும் வாட்ஸ்அப் குழுக்களில் இணைந்து, இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிரான தகவல்களை பரப்பியதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
குறிப்பாக, பாகிஸ்தானிய தொலைபேசி எண்களுடன் அவர் பல முறை தொடர்பில் இருந்ததும், இந்திய பாதுகாப்பு தொடர்பான பல முக்கியமான தகவல்களும், புகைப்படங்களும் அவர் பகிர்ந்திருந்ததும் உறுதியாகியுள்ளது. விசாரணையில், துஃபைல் “கஸ்வா-இ-ஹிந்த்”, பாபர் மசூதி பழிவாங்கல் மற்றும் ஷரியா சட்டத்தை இந்தியாவில் அமல்படுத்த வேண்டும் என்ற பேணைகள் அடங்கிய வீடியோக்களை பகிர்ந்திருந்தது தெரியவந்தது. இந்த வீடியோக்கள் பாகிஸ்தானில் செயல்படும் ‘தெஹ்ரீக்-இ-லப்பாயக்’ அமைப்பின் தலைவர் மௌலானா ஷாத் ரிஸ்வியிடம் தொடர்புடையவை எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் ராஜ்காட், நமோகாட், ரயில்நிலையம், ஜமா மசூதி, நிஜாமுதீன் அவுலியா உள்ளிட்ட முக்கிய இடங்களின் புகைப்படங்களை பாகிஸ்தான் எண்களுடன் பகிர்ந்துள்ளார். இவர் பாகிஸ்தானின் பைசலாபாத்தில் வசிக்கும் நஃபீசா என்ற பெண்ணுடன் பேஸ்புக் மூலம் தொடர்பில் இருந்ததாகவும், அந்த நபரின் கணவர் பாகிஸ்தான் ராணுவத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மே 22, 2025 அன்று, லக்னோ ஏடிஎஸ் காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகள் 148 மற்றும் 152-ன் கீழ் துஃபைலை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவரிடம் இருந்து மொபைல் போன் மற்றும் பல சிம் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 600க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் எண்களுடன் தொடர்பு வைத்திருந்ததற்கான ஆதாரங்களும் போலீசாரிடம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது துஃபைல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.