
பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓபிஎஸ் அணி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஜே.சி.டி பிரபாகரன், நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். நான் போய புரட்சித் தலைவரிடம் கேள்வி கேட்டது போல, யாரிடமும் எந்த கேள்வியையும் கேட்காமல், யாரிடமும் பேசாமல் கொஞ்சம் அமைதியாக இருந்தோமேயானால் எல்லா வியூகங்களையும் கையில் வைக்கின்ற… மனதிலேயே வைத்திருக்கின்ற… வியூகங்களை வகுத்தெடுக்கின்ற வல்லவர் நம்முடைய அண்ணன் ஓபிஎஸ் அவர்கள், நிச்சயமாக அதை உலகோருக்கு வெளிப்படுத்துகின்ற காலம் நெருங்கி இருக்கின்றது.
கொஞ்சம் அமைதியாக இருங்கள். வெல்ல போவது நாம் தான் என்று நாடு பார்க்கப் போகிறது. நமக்கு எதிராக வகுக்கப்பட்ட வியூகங்கள் எல்லாம் தவிடு பொடியாக்கிய காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. உள்ளபடியே சொல்லுகிறேன்… இந்த இயக்கத்தை பாழ்படுத்திய எடப்பாடி பழனிச்சாமி…. இந்த இயக்கத்தை பாழ்படுத்துவதற்காக வியூகங்களை அவரோடு இருந்து வகுத்துக் கொண்டிருக்கின்ற, பணியாற்றிக் கொண்டிருக்கின்ற, பம்பரமாக வேலை செய்து கொண்டுள்ள முன்னாள் அமைச்சர்கள்… நான் அத்தனை பேருக்கும் சொல்லுகின்றேன்.
காலம் உங்களை மன்னிக்காது…. மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள்… ஏனென்றால் நீதி, நியாயம், தர்மம் அண்ணன் பக்கம் தான் இருக்கின்றது என்று இந்த தமிழ்நாடு பார்க்கக்கூடிய நிலைமை இன்றைக்கு உருவாகிக் கொண்டிருக்கின்றது. இங்கு அருமை அண்ணன் மனோஜ் பாண்டியன் அவர்கள் சொன்னதைப்போல, மற்றவர்கள் குறிப்பிட்டு பேசியதை போல… நெருங்கி வருகின்ற அந்த நாடாளுமன்ற தேர்தலில் அண்ணன் அவர்கள் வகுகின்ற அந்த வியூகம் தான் வெற்றி கனியை பறிக்க போகிறது. உண்மையான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் யார் என்பதை நாட்டிற்கு உணர்த்தப் போகிறது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்ற பொழுது, இந்த இயக்கம் உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்கின்ற காட்சியை நான் காண்கின்றேன் என தெரிவித்தார்.