
சென்னையில் வடக்கு மாவட்ட பகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 48 ஆவது பிறந்தநாளையொட்டி ஆளும் கட்சியான திமுக கட்சியின் சார்பில் 48 தம்பதிகளுக்கு திருமணம் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் விளையாட்டு துறை அமைச்சரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். மேலும் 48 தம்பதிகளுக்கும் திருமணமும் நடத்தி வைத்தார். மேலும் இதைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, எனது பிறந்த நாளை ஒட்டி 48 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. இந்த சுயமரியாதை திருமணத்தை முத்தமிழ் அறிஞர் கலைஞர், பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோர் வழியில் இப்போது நாங்களும் பின்பற்றுகிறோம்.
கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை போன்ற பல்வேறு நல்ல நலத்திட்டங்களை திராவிட அரசு மேற்கொண்டு வருவதால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆத்திரமாக வருகிறது. திமுகவின் ஆட்சியைப் மக்கள் கொண்டாடுவதை பார்த்து எதிர்க்கட்சிகள் வயிறு எரிகிறார்கள். எல்லா நலத்திட்டங்களுக்கும் கலைஞர் பெயரை வைப்பதற்கு காரணம் அவர் தனது 96 வயது வரை தமிழக மக்களுக்காகவே உழைத்த உள்ளார். ஆனால் எதிர்க்கட்சி அ.தி.மு.க எம்.ஜி.ஆர் பெயரையோ அல்லது புரட்சித்தலைவி ஜெயலலிதா பெயரையோ வைப்பதில் கூட ஆர்வம் காட்ட மாட்டார்கள்.
அவர்கள் அதற்கு பதிலாக மோடியின் பெயரையும், அமித்சாவின் பெயரையும் வைக்கவே ஆர்வம் காட்டுவர். மேலும் எந்த காலத்திலும் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி அமையாது எனக் கூறிய பழனிசாமி இன்னும் ஒரு ரைடு நடந்தால் போதும் அ.தி.மு.கவை பா.ஜ.கவுடன் இணைத்து விடுவார். 2026ல் நடக்கவுள்ள சட்டமன்ற தொகுதி தேர்தலில் 200 தொகுதிகளிலும் வெல்வதே நமது லட்சியமாகும். தலைவர் கூறிய வழியிலேயே நாமும் நமது ஆட்சி திட்டங்களை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் நமது ஆட்சி அனைவரும் உறுதுணையாக நின்று செயல்பட வேண்டும். இவ்வாறு இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.