உத்தரபிரதேச மாநிலத்தின் ஆக்ரா நகரில், பாலாஜி ஜுவல்லர்ஸ் என்ற நகைக்கடையில் நடந்த பகல் நேர கொள்ளை சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த இருவர், கடைக்குள் புகுந்து, அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த ஊழியர் ரேணுவை துப்பாக்கியால் மிரட்டினர்.

பின்னர், கடையில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்றனர். இந்தச் சம்பவத்தின் போது கடை உரிமையாளர் யோகேஷ் சௌதரி அங்கு வந்தார். கொள்ளையர்களுடன் ஏற்பட்ட தகராறின் போது, அவர்களில் ஒருவர் யோகேஷை மார்பில் சுட்டார். காயம் காரணமாக அவர் உடனே கீழே விழுந்து உயிரிழந்தார்.

 

இந்த முழு சம்பவமும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பொதுமக்கள் இந்த சம்பவத்தை கண்டித்து, நகரத்தில் பாதுகாப்பு குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளனர். ஆக்ரா காவல்துறை இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ளது.

குற்றவாளிகளை பிடிக்க சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்படுவதுடன், நகரம் முழுவதும் போலீசார் தடுப்புச் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.