
கோவை மாவட்டம், மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட எட்டிமடை வனப்பகுதியில் தாயை பிரிந்த நிலையில் ஆண் குட்டி யானை ஒன்று காணப்பட்டது. பிறந்து ஒரு மாதமான இந்த குட்டி யானையை வன ஊழியர்கள் மீட்ட நிலையில் அதன் தாயிடம் சேர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். அதற்காக தாய் யானையை தேடி வந்த வனத்துறையினரின் முயற்சி இறுதியில் தோல்வியில் முடிந்தது. இதனால் வனத்துறை உயர் அதிகாரிகள் குட்டி யானையை முதுமலை புலிகள் காப்பகத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டனர்.
அந்த உத்தரவின்படி வனத்துறையினர் யானை குட்டியை வாகனம் மூலம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் ஒப்படைத்தனர். அதன் பின் அந்த குட்டி யானைக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் பராமரிப்பதற்காக 2 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து குட்டி யானையை பரிசோதித்த மருத்துவர் யானை நன்றாக உள்ளது என்று கூறினார். மேலும் தெப்பக்காடு யானைகள் முகாமில் குட்டி யானை சேர்க்கப்பட்ட நிலையில் வளர்ப்பு யானைகளின் எண்ணிக்கை தற்போது 30 ஆக உயர்ந்துள்ளது என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்