பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திலிருந்து எலக்ட்ரானிக்ஸ் சிட்டிக்கு மின்சார பறக்கும் டாக்ஸி சேவை விரைவில் அறிமுகமாகவுள்ளது. இதன் மூலம், வழக்கமான 3 மணி நேர பயணம் 19 நிமிடங்களில் முடிந்துவிடும். இதற்கான திட்டத்தை பெருநகர நிர்வாகம் உருவாக்கி, தனியார் நிறுவனமான சர்லா ஏவியேஷன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த சேவைக்கு 1,700 ரூபாய் கட்டணமாகும்.

மின்சார பறக்கும் டாக்ஸி, eVTOL (electric Vertical Take-Off and Landing) எனப்படும் செங்குத்து பறக்கும் மின்சார விமானம் ஆகும். இது சுற்றுச்சூழல் மாசு குறைய உதவுவதோடு, வாகன நெரிசலிலிருந்து மக்களை மீட்கும். முதற்கட்டமாக, பெங்களூருவில் 52 கிமீ தூரத்தில் சர்வதேச விமான நிலையத்திலிருந்து எலக்ட்ரானிக்ஸ் சிட்டி வரை சேவை தொடங்கப்படும்.

முழுவதும் மின்சார இயக்கத்தில் செயல்படும் இந்த டாக்ஸிகள், ஏழு இருக்கைகள் கொண்டவையாக இருக்கும். இதன் மூலம், பெரும் அளவிலான போக்குவரத்து சிரமங்கள் தவிர்க்கப்படும். இந்த சேவையை மும்பை, டெல்லி, புனே போன்ற நகரங்களுக்கும் விரைவில் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

சேவை தொடங்க, தொழில்துறை தடையில்லாச் சான்றுகள் பெறுவதற்காக தனியார் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.