சேலம் இரும்பாலை அருகே உள்ள பகுதியில் சசிகுமார் என்பவரின் மகன் சாரதி (22), தாதகாபட்டியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனின் மகள் சாருபிரியா(22) ஆகிய இருவரும் சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் தன்னுடன் வேலை பார்க்கும் நண்பர்களுடன் சேர்ந்து ஏற்காடு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி இன்று அதிகாலையில் தாதகாப்பட்டியிலிருந்து சாரதி, சாருபிரியா ஆகிய இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

தொடர்ந்து அவர்கள் திருவாக்கவுண்டனூர் மேம்பாலம் அருகே சென்றபோது அங்கிருந்த சிறு பள்ளத்தில் தண்ணீர் தேங்கி கிடந்ததால் சற்று ஒதுங்கி செல்ல முயன்றனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று அவர்கள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவர்கள் இருவரும் பலத்த காயத்துடன் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதில் சாரதி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

வயிற்றுப் பகுதியில் காயம் அடைந்த சாருபிரியா சிறுது நேரத்தில் பலியானார். பின்னர் அவர்களை காணவில்லை என்று அவர்களுடன் வந்த நண்பர்கள் திரும்பி வந்து பார்த்தபோது இருவரும் இறந்து கிடந்தனர். இதை பார்த்த அதிர்ச்சி அடைந்த அவர்கள் காவல்துறையினருக்கு  தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையின் வழக்கு பதிவு செய்து அவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.