
இஸ்ரேல் பாலஸ்தீனிய நகரமான காசாவில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் காசாவில் மக்கள் வசிக்கும் முகாம்கள், பள்ளிகள் என அனைத்து இடங்களிலும் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் காசாவில் பொதுமக்களுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் மற்றும் உணவுப் பொருட்களை செல்ல முடியாதபடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதனால் காசாவில் உள்ள குழந்தைகள் பெண்கள் பொதுமக்கள் என பலரும் பசியாலும் ஊட்டச்சத்து குறைபாட்டாலும் பெரிதும் துன்பப்படுகின்றனர். அந்த நடவடிக்கைக்கு எதிரான புகார் குறித்த விசாரணை சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க வெளியுறவுத்துறை சட்ட ஆலோசகர் ஜோசுவா சிம்மன்ஸ் கூறியதாவது, ஐ.நா அகதிகள் நிறுவனம் காசாவில் செயல்படுவதை தடை செய்ய இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என கூறினார்.
இதனைத் தொடர்ந்து காசாவில் அந்நிறுவனத்தின் நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டதால் ஊட்டச்சத்து குறைபாட்டால் இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 50 பேர் குழந்தைகள். மேலும் மீன் பிடிக்க செல்லும் காசா மீனவர்கள் மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதுபோன்று தொடர்ந்து அனைத்து வழிகளிலும் உணவு தடை செய்யப்பட்ட பின் பசியை போக்க காசா பகுதியில் உள்ள மக்கள் கரை ஒதுங்கும் கடல் ஆமைகளை பிடித்து உண்டு உயிர் வாழ்ந்து வருகின்றனர். இதுகுறித்து காசா மீனவர் அப்துல் ஹலீம் கூறியதாவது, இதுவரை கடல் ஆமைகளை உண்பது குறித்து ஒருபோதும் நினைத்தது கூட இல்லை.
ஆனால் வேறு வழி இல்லை என்பதால் அவற்றை சாப்பிடுவதாக கூறியுள்ளார். மேலும் காசாவை சேர்ந்த மஜிதா கானன் என்பவர் கூறியதாவது, குழந்தைகள் கடல் ஆமைகளை பார்த்து மிகவும் பயந்தனர். ஆனால் அதன் இறைச்சி சுவையாக இருப்பதாக கூறி நாங்கள் அவர்களிடம் சொல்கிறோம் என வருத்தத்துடன் தெரிவித்தார்.